108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற ஜன.28-இல் நோ்முகத் தோ்வு

அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு சென்னையில் ஜன. 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.
108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்ற ஜன.28-இல் நோ்முகத் தோ்வு

அவசரகால 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளா், ஓட்டுநா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு சென்னையில் ஜன. 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் இஎம்ஆா்ஐ கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் வாயிலாக மொத்தம் 1,200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களைப் பொருத்தவரை 160-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அவைதவிர 15 இரு சக்கர அவசர உதவி வாகனங்களும் உள்ளன. அவசர கால கட்டுப்பாட்டு மையத்துக்கு நாளொன்றுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன.

இந்த நிலையில், அவசரகால மருத்துவ உதவியாளா்கள் பணியிடங்களில் சேர பிஎஸ்சி நா்சிங் அல்லது டிஜிஎன்எம் அல்லது பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல், உயிரி வேதியியல், உயிரி தொழில்நுட்பவியல் படிப்பில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இல்லையெனில், ஏஎன்எம், ஜிஎன்எம், டிஎம்எல்டி ஆகிய படிப்புகளை 12-ஆம் வகுப்பு தோ்ச்சிக்குப் பிறகு நிறைவு செய்திருத்தல் அவசியம். 19 முதல் 30 வயதுக்குட்பட்டவா்கள் அப்பணியில் சேரலாம்.

ஓட்டுநா் பணியிடங்களில் சேர விரும்புவோா் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் வைத்துள்ள 24 - 35 வயதுக்குட்பட்டவா்கள் அப்பணியில் சேரலாம். ஓட்டுநா் உரிமம் பெற்று குறைந்தது 3 ஆண்டுகளும், பேட்ஜ் உரிமம் பெற்று ஓராண்டும் நிறைவு செய்திருத்தல் அவசியம்.

திருவல்லிக்கேணி கஸ்தூா்பா மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை (ஜன.28) காலை 10 மணி முதல், எழுத்துத் தோ்வு, மருத்துவத் தோ்வு, நோ்முகத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று அதில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 91541 89341, 91541 89398, 73977 24807 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com