மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறோம்: எதைக் குறிப்பிடுகிறார் ஸ்டாலின்?

நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறோம்: எதைக் குறிப்பிடுகிறார் ஸ்டாலின்?
மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை படைத்திருக்கிறோம்: எதைக் குறிப்பிடுகிறார் ஸ்டாலின்?

சென்னை: நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மழை வெள்ளக் காலங்களில் தடுப்புப் பணிகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய ஊழியர்களுக்குப் பாராட்டு விழா சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது.

விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் அந்த விழாக்களையெல்லாம்விட,  உங்களைப் பாராட்டக்கூடிய இந்த விழாவைத் தான் நான் பெருமையாகக் கருதுகிறேன்.

அதற்கு என்ன காரணம் என்று கேட்டால், நம்முடைய அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியிருக்கிறது. இதில் மிகமிக முக்கியமான இரண்டு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம்.  அந்த இரண்டு சாதனைகளைப் படைத்த காரணத்தால், மக்களிடத்திலே நமக்கு மிகப் பெரிய பாராட்டு கிடைத்திருக்கிறது. ஒன்று – கொரோனா என்ற கொடிய நோயை எதிர்த்து அதை வென்றோம். அது ஒரு பாராட்டு.

 இரண்டாவது - மழை, வெள்ளத்தில் இருந்து மக்களைக் காத்தோம், அது இரண்டாவது பாராட்டு.

கரோனாவை கட்டுப்படுத்தியதற்குப் பிறகு உடனடியாக ஒரு மிகப்பெரிய மழையை நாம் சந்தித்தோம்.

அடுத்த மழை வருவதற்கு முன்னால் அல்லது ஒரு வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னால், என்ன மழை பெய்தாலும் அந்த மழையின் காரணமாக தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற ஒரு சூழலை உருவாக்குவதற்காக நாம் உறுதி எடுத்துக் கொண்டோம். உறுதி எடுத்துக்கொண்டது மட்டுமல்ல, அந்த உறுதியை எந்த அளவிற்கு நிறைவேற்றிக் காட்டினோம் என்பது நாட்டிற்கும் தெரியும், உங்களுக்கும் நன்றாகத் தெரியும். அதைத்தான் நான் குறிப்பிட்டுச் சொன்னேன், மிகப் பெரிய இரண்டு சாதனைகளை நாம் செய்து முடித்திருக்கிறோம்.  

சமூக வலைத்தளங்களில் - இது கடந்த முறை இங்கு தண்ணீர் தேங்கி இருந்தது என்று அந்தப் படத்தையும் போட்டு, இந்த முறை அந்தப் பகுதியில் தேங்கவில்லை என்ற அந்தப் படத்தையும் போட்டு மக்களிடத்தில் எடுத்துக் காட்டினார்கள். பொதுமக்களும் அதை வாட்ஸ்ஆப்-ல் பகிர்ந்த அந்த செய்திகளையெல்லாம் நாம் தொடர்ந்து பார்த்தோம். நான் அந்த செய்திகளையெல்லாம் பார்த்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது. அந்த அளவிற்கு மக்கள் நம்மை மனதாரப் பாராட்டினார்கள். அதேபோல், ஊடகங்களும் பாராட்டின. நேரில் பார்க்கக்கூடிய பொதுமக்களும் நம்மை சந்திக்கிற நேரத்தில் தங்களுடைய பாராட்டுக்களையெல்லாம் வெளிப்படையாக தெரிவித்தார்கள்.  இப்படிப்பட்டப் பாராட்டு மழையில் நனைவதற்குக் காரணம் யார் என்று கேட்டீர்களென்றால், நீங்கள்தான். அதனால் தான், உங்களைப் பாராட்ட நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்.

பெருநகர சென்னை மாநகராட்சியில்,  சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், காவல்துறை ஆகிய துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் அத்தனைபேரும் பாராட்டுக்குரியவர்களாக இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களையெல்லாம்  ஒருங்கிணைத்து பணியாற்றியிருக்கக்கூடிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவையும் மனதார பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். 

அதேபோல் சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அமைச்சர்களான மா.சுப்பிரமணியன், சேகர் பாபு இரவு பகல் பார்க்காமல் அவர்கள் எந்த அளவிற்கு பணியாற்றினார்கள் என்பதை நீங்களெல்லாம் நன்கு அறிவீர்கள். 

அதேபோல் சென்னை மாநகரத்தின் மேயராகப் பொறுப்பேற்று இன்றைக்கு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய சகோதரி மேயர் பிரியா அவர்களும், துணை மேயர் மகேஷ்குமார் அவர்களும் 24 மணிநேரமும் இந்த மாநகருக்குள் சுற்றிச்சுழன்று பணிகளையெல்லாம் எந்த அளவிற்கு முடுக்கிவிட்டார்கள் என்பதை நேரடியாக நாமும் பார்த்தோம். 

அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய ககன் தீப் சிங் பேடி அவர்கள் ஆற்றிய பணி என்பது மிகமிக மகத்தானது ஒன்று. அனைத்துத் துறைகளையும் மிக சாமர்த்தியமாக ஒருங்கிணைத்து செயலாற்றி அதிலே வெற்றியும் கண்டிருக்கிறார் நம்முடைய ஆணையர் அவர்கள்.

அதேபோலவே, ஐந்து விரலும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் அது ஒரு கையின் பலத்தை நாம் தெரிந்துகொள்ள முடியும்.  அப்படித்தான், தண்ணீர் நின்றால் - ஒரு மணி நேரத்தில் மோட்டார் வைத்து அதை அகற்றியது மாநகராட்சி!

நீர் நிலைகளைத் தூர் வாரி வைத்திருந்தது நம்முடைய நீர்வளத்துறை!
சாலைகளை உடனடியாக சரி செய்து கொடுத்தது நெடுஞ்சாலைத் துறை!
சீரான மின்சாரத்தை வழங்கியது மின்சாரத் துறை!
பொதுமக்களுக்கு எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பார்த்துக் கொண்டது நம்முடைய காவல்துறை!

இதைத்தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்று நாம் சொல்கிறோம். எல்லார்க்கும் எல்லாம் சொல்கிறோம் அல்லவா அது தான் திராவிட மாடல் ஆட்சி. எல்லோரும் சேர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்ட காரணத்தால்தான் இந்த வெற்றியை நம்மால் பெற முடிந்திருக்கிறது.

மழை வெள்ளக் காலத்தில் மக்களிடத்தில் நல்ல பெயர் எடுப்பது மிகமிக சிரமம். 

அரசாங்கத்தில் வேலை பார்க்கிறோம் - சம்பளம் வருகிறது என்று இல்லாமல், மக்களுக்காக பணியாற்றுகிறோம் என்கிற அந்த சேவை மனப்பான்மை உள்ளத்தோடு இருக்கக்கூடிய நிலையில் நீங்கள் பணியாற்றிய காரணத்தில்தான் இந்தப் பாராட்டும், இந்தப் பெருமையும், இந்தப் புகழும் இன்றைக்கு இந்த அரசாங்கத்திற்கு, இந்த மாநகராட்சிக்கு, நமக்கெல்லாம் வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, தூய்மைப் பணியாளர்களின் பணி என்பது மிகமிக மகத்தான ஒன்று என்பதை நான் இங்கே பெருமையோடு குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

துப்புரவுப் பணியாளர்கள் என்ற அந்த சொல்லையே மாற்றியது  முன்னாள் முதல்வர் கருணாநிதிதான். அவர்தான்,  தூய்மைப் பணியாளர் என்று மாற்றியவர். அந்தப் பணியின் கடினமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய நீங்கள் சிறப்பாக பணியாற்றியிருக்கிறீர்கள். அதனால்தான் இந்த முகமலர்ச்சியோடு நம்முடைய அரசாங்கத்தை மக்கள் பார்க்கிறார்கள்.
2021-ஆம் ஆண்டு பருவமழையின்போது பெற்ற அனுபவத்தைக் கொண்டு, உடனடியாக நாம் எல்லா வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் குறுகிய காலத்தில் செய்து முடித்தோம். அதன் பயனை 2022-ஆம் ஆண்டு பருவமழையின்போது கண்கூடாகப் பார்த்தோம். இனிவரும் ஆண்டுகளில், மழைநீர் தேக்கம் இல்லாத பருவமழைக் காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயமாக பார்க்க இருக்கிறார்கள். இந்த அரசு மேலும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி பாராட்டும் உள்ளம் அனைவருக்கும் வந்தாக வேண்டும். பாராட்டுவதை வெளிப்படையாகப் பாராட்ட வேண்டும். வெளிப்படையாக பாராட்டினால்தான், அறிவுறுத்தவும், கேள்வி கேட்கவும் நாம் உரிமை பெற்றிடமுடியும். அந்த வகையில்,
* பெருநகர சென்னை மாநகராட்சி
* சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம்
* நீர்வளத்துறை
* நெடுஞ்சாலைத்துறை
* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
* காவல்துறை

ஆகிய துறைகளின் அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகிய அனைவரையும் நான் இந்த நேரத்தில் மனதார பாராட்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com