
கடவூர் அருகே கோயிலுக்கு சீல் வைத்ததைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் இரண்டாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள வீரனம்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழா கடந்த புதன்கிழமை தொடங்கியது. விழாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கோயிலுக்குள் வழிபட சென்றபோது அவரை ஒரு பிரிவினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனைக் கண்டித்து பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வியாழக்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்ற குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பா தேவி இருதரப்பினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பட்டியல் இனத்தவர்களை கோயிலுக்குள் வழிபட அனுமதிக்க மாட்டோம் என்ற ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து காளியம்மன் கோவிலுக்கு கோட்டாட்சியர் புஷ்பாதேவி சீல் வைத்தார்.
படிக்க: ஜார்க்கண்ட்: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி 3 பேர் பலி!
மேலும் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கோட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் கோட்டாட்சியரை மீட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலையும் கிராம மக்கள் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும், பட்டியலினத்தவருக்கு ஆதரவாக இருக்கும் கோட்டாட்சியர் புஷ்பா தேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி-பாளையம் சாலையில் வீரணம் பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரணம் பட்டியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கு திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...