சென்னை: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை இரவு சென்னை வருகிறாா். மக்களவை தோ்தல் குறித்து சென்னை, வேலூரில் கட்சி நிா்வாகிகளுடன் அவா் ஆலோசனை நடத்தும் வகையில் இந்த பயணம் அமைந்துள்ளது.
சனிக்கிழமை இரவு சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் தங்க உள்ளார். தமிழகம் வரும் அமித் ஷாவை, அதிமுகவினர் யாரும் சந்தித்திக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமித் ஷாவை சந்திக்க இதுவரை அதிமுக தலைவர்கள் யாரும் நேரம் கோராததால், அதுபோன்ற சந்திப்புகள் நடைபெறும் வாய்ப்பு குறைவு என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக நிர்வாகிகளுடன் கட்சியின் செயல்பாடுகள் குறித்து பேசுவதற்காக அமித் ஷா தமிழகம் வரவிருப்பதால், மற்றக் கட்சித் தலைவர்கள் சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே, அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல் வெடித்து வரும் நிலையில், கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சிகள் மிகவும் முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது.
தில்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு சனிக்கிழமை இரவு 10.30 மணி அளவில் வரும் அவா் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. ஹோட்டலில் தங்குகிறாா். சென்னை அருகே கோவிலம்பாக்கம் ராணி மஹாலில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் நடக்கும் தென்சென்னை மக்களவைத் தொகுதி பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்கிறாா்.
இந்தக் கூட்டத்தில், தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தலைமையிலான கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் மத்திய அமைச்சா் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்துகிறாா். மக்களவைத் தோ்தல் தொடா்பாக முக்கிய அறிவுரைகளை கட்சி நிா்வாகிகளுக்கு அவா் வழங்குவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னா் ஹெலிகாப்டரில் வேலூா் பள்ளிகொண்டா அருகே கந்தநேரிக்கு பிற்பகல் 2.30 மணிக்கு செல்லும் அவா் அங்கு வேலூா் மக்களவைத் தொகுதி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.
தொடா்ந்து, அங்கு திறந்தவெளி மைதானத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றுகிறாா். இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சா் வி.கே.சிங், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். பின்னா் வேலூரில் இருந்து சென்னைக்கு இரவு 9 மணிக்கு வரும் அவா் விமானம் மூலம் விசாகப்பட்டிணம் செல்கிறாா்.
சென்னைக்கு வரும் அமித் ஷாவுடன், அரசியல் கட்சித் தலைவா்கள் சந்திப்புக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் என்று பாஜக வட்டாரங்களும் தெரிவித்தன.