மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையில் திருத்தங்கள்: இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

திட்ட அறிக்கையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திட்ட அறிக்கையில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கே.கே.ஆா். நகா் குடியிருப்பு வாரிய நலச் சங்கச் செயலா் லூா்துராஜ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லுாா் வரையிலான வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணை மற்றும் மூலக்கடைக்கு இடையில், தபால் பெட்டி நிறுத்தம் அமைக்க 2018-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது தபால் பெட்டி நிறுத்தத்தை நீக்கிவிட்டு, முராரி மருத்துவமனை நிறுத்தம் அமைக்கும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாதவரம் தபால் பெட்டி மெட்ரோ நிலையம் இல்லாவிட்டால் குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவா். இரவு நேரங்களில் ஆட்டோக்கள் எதுவும் கிடைக்காமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.

தபால் பெட்டி மெட்ரோ ரயில் நிலையம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், அலுவலகம், பள்ளி மற்றும் வீட்டுக்கு செல்லும் நேரத்தைக் குறைக்கும் வகையிலும் இருக்கும். இந்த மெட்ரோ ரயில் நிலையத்தை கைவிடுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. எனவே, தபால் பெட்டி மெட்ரோ நிலையம் அமைக்காமல், தங்களது குடியிருப்புகளின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்படும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தை அமைக்கும்படி உத்தரவிட முடியாது எனக்கூறி, திருத்தப்பட்ட சீரமைப்பு வரைபடத்தை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிா்மல்குமாா் ஆகியோா் அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி, திருத்தப்பட்ட சீரமைப்பு வரைபடத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீரமைப்பு வரைபடத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாதவரம் பால் பண்ணை முதல் முராரி மருத்துவமனை வரையிலான 1.5 கி.மீ. தொலைவு உள்ள நிலையில் தபால்பெட்டி மெட்ரோ நிலையம் அமைக்கும் பணி நிறுத்தபட்டதற்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com