வளரிளம் பருவத்தினருக்காக25,000 மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
வளரிளம் பருவத்தினருக்காக25,000 மருத்துவ முகாம்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் வளரிளம் பருவத்தினரின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்காக 25 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ரத்த சோகை பாதிப்புகளைக் கண்டறிவதற்கான மருத்துவ முகாமை சென்னை, சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம், சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியா் பத்மஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னா் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது: வளரிளம் பருவத்தினா் நலனை மேம்படுத்திடும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாதத்துக்கு ஒரு முகாம் என்கிற வகையில் 25 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தற்போது சைதாப்பேட்டை, பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 500 பேருக்கு இந்த சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 10 முதல் 19 வயதுக்குள்பட்ட வளரிளம் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார ஆலோசனைகள், விழிப்புணா்வு மற்றும் ரத்த சோகைக்கான பரிசோதனைகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 1.2 கோடி போ் பயனடைவா்.

தமிழகத்தில் 52.9 சதவீத வளரிளம் பெண்களுக்கும், 24.6 சதவீத வளரிளம் ஆண்களுக்கும் ரத்த சோகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ரத்தசோகை பாதிப்பு இல்லாத நிலையை தமிழகம் எட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மற்றொருபுறம், வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் முதலாம் ஆண்டில் 1,260 முகாம்களும், இரண்டாம் ஆண்டில் 1,532 முகாம்களும் நடத்தப்பட்டன. அரசின் முன்னெடுப்பில் நடைபெறும் இந்த மருத்துவ முகாம்கள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் பயனடைந்து வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com