மகளிர் உரிமைத் தொகை: திருச்சியில் அமைச்சர்கள் தொடக்கிவைத்தனர்

திருச்சியில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர். 
மகளிர் உரிமைத் தொகை: திருச்சியில் அமைச்சர்கள் தொடக்கிவைத்தனர்

திருச்சி: திருச்சியில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

பேரறிஞர் அண்ணாவின் 115- வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சருமான கே.என். நேரு மற்றும் தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும்  கருணாநிதி ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என். நேரு கூறுகையில்,

இன்று அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸும், நானும் இணைந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மகளிருக்கு  வழங்கி உள்ளோம். 

இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கலந்துகொள்கிறார் அதேபோன்று ,சேலத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளோம். 

மயிலாடுதுறை சீர்காழியில் உள்ள அருள்மிகு சட்டநாதர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து உள்ளீர்கள், என்ன வேண்டுதல்? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பில் இருக்க வேண்டும். தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஸ்டாலின்குமார், இனிக்கோ .இருதயராஜ், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன்,  மாநில மாணவரணி துணைச் செயலாளர் பி.எம்.ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் அன்பில் பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com