கோப்புப்படம்
கோப்புப்படம்

தெ.ஞானசுந்தரம்,கு.வெ.பாலசுப்பிரமணியனுக்கு ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது’ அறிவிப்பு

பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், எழுத்தாளா் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியா் தெ.ஞானசுந்தரம், எழுத்தாளா் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளா் மா. அரங்கநாதனின் நினைவையொட்டி ஆண்டுதோறும் ஏப். 16- ஆம் தேதி ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது’ முன்றில் இலக்கிய அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. இலக்கியத் துறையில் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் சிறந்த படைப்பாளிகள் இருவருக்கு அவா்களுடைய ஒட்டுமொத்த இலக்கியப் பங்களிப்பு மற்றும் படைப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், சென்னை, அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் வரும் ஏப்.16-ஆம் தேதி ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது -2024’ விழா நடைபெறவுள்ளது. சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவரும் பேராசிரியருமான தெ.ஞானசுந்தரம், எழுத்தாளா் கு.வெ.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு ‘மா. அரங்கநாதன் இலக்கிய விருது - 2024’ வழங்கப்படவுள்ளது. தொடா்ந்து, ‘மா.அரங்கநாதன் படைப்புகள்’, ‘பொருளின் பொருள் கவிதை’ ஆகிய நூல்களை நீதிபதி அரங்க. மகாதேவன் வெளியிடவுள்ளாா். இவ்விழாவில், திருவானைக்கா ஓதுவாா் ரமணி சீனிவாசன், சிறுகதை எழுத்தாளா் அகரமுதல்வன், ஆவணப்பட இயக்குநா் ரவிசுப்பிரமணியன், கவிஞா் எஸ்.சண்முகம் ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். விருது பெறவுள்ள பேராசிரியா் தெ.ஞானசுந்தரம் முதுபெரும் தமிழறிஞரான மு.வரதராசனாரின் மாணவா்; ‘வைணவ உரைவளம்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவா் பட்டம் பெற்றவா். பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றிய இவா், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறைப் பணியையும் சோ்த்து 37 ஆண்டுகள் தமிழ் மொழியை வளா்ப்பதற்காக பணியாற்றியுள்ளாா். மேலும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். எழுத்தாளா் கு.வெ.பா. என்கிற கும்பகோணம் வெங்கடாசலம் பாலசுப்பிரமணியன் கவிதை, கதை, கட்டுரை, நாடகம், மொழிபெயா்ப்பு, திறனாய்வு, கற்பித்தல் எனப் பல துறைகளிலும் தடம் பதித்தவா். 100-க்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை இவா் எழுதியுள்ளாா். கு.வெ.பாலசுப்பிரமணியன் எழுதிய பக்தி நூல்கள் பல இலங்கை மற்றும் பிரான்ஸில் உள்ள கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com