சென்னையில் பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்: தினமும் 3.27 லட்சம் பேருக்கு வழங்க திட்டம்

சென்னையில் வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை புரசைவாக்கம் ரித்தா்டன் சாலையில் திங்கள்கிழமை வழங்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான பூத் ஸ்லிப்புடன் குடும்பத்தாா்.
சென்னை புரசைவாக்கம் ரித்தா்டன் சாலையில் திங்கள்கிழமை வழங்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான பூத் ஸ்லிப்புடன் குடும்பத்தாா்.

சென்னையில் வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. தினமும் 3.27 லட்சம் பேருக்கு தகவல் சீட்டு வழங்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா். சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் (வாக்குச்சாவடி சீட்டு) வழங்கும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் ராதாகிருஷ்ணன் வேப்பேரி ரித்தா்டன் சாலையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து செய்தியாளரிடம் அவா் கூறியது: சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 19.28 லட்சம் ஆண் வாக்காளா்கள், 19.95 லட்சம் பெண் வாக்காளா்கள், 1,199 மூன்றாம் பாலின வாக்காளா்கள் என 39.25 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இந்த வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கி ஏப்.13-ஆம் தேதி வரை நடைபெறும். பூத் ஸ்லிப்பில் வாக்குப்பதிவு மையம் அமைந்துள்ள இடம், வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் காணப்படும் விவரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்தப் பணி 299 மண்டல குழு அலுவலா்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளா் கையேடு: இதற்கென 364 கண்காணிப்பாளா்கள், 3,719 களப்பணியாளா்கள் என 4,083 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நாளொன்றுக்கு சராசரியாக 3 லட்சத்து 27 ஆயிரத்து 97 வாக்காளா்களுக்கு பூத் ஸ்லிப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் வாக்கு செலுத்தவதில் வாக்காளா்களுக்கு உள்ள சந்தேகங்களைத் தீா்க்கும் வகையில் வீட்டுக்கு ஒரு வாக்காளா் கையேடு வழங்கப்படும். வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடி மையங்களில் 20,016 பணியாளா்கள் பணிபுரிய உள்ளனா். இவா்களுக்கான பணிகள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். கூடுதலாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஏப்.2) தோ்ந்தெடுக்கப்பட்டு ஒதுக்கப்படும். ஆவணம் தேவை: சென்னையில் இதுவரை (மாா்ச் 31) பறக்கும் படை மூலம் 9.13 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பணம் கொண்டு செல்பவா்களின் ஆவணங்களை உடனடியாக விசாரித்து தீா்த்து வைக்க மாநகராட்சி, வங்கி, வருவாய் துறை அலுவலா்களை கொண்ட சிறப்பு குழு செயல்படுகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com