தேர்தலுக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

வேலூர், ஏப். 2: மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வருகை தருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

மேலும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இலங்கையை கண்டிக்க துணிவு இல்லாத பிரதமருக்கு, கச்சத்தீவு விவகாரம் குறித்து பேச எந்தத் தகுதியும் இல்லை என்றும் அவர் சாடினார்.

திமுக வேட்பாளர்கள் டி.எம்.கதிர்ஆனந்த் (வேலூர்), எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியதாவது:

தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தியுள்ள பல திட்டங்கள் மக்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும், "இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதனைகளாக மாறக்கூடிய பல திட்டங்கள் திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக அரசு மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வந்தபோது மெளனமாக இருந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது திருந்திவிட்டதுபோன்று வாக்கு கேட்டு வருகிறார்.

தேர்தலுக்காக மட்டுமே...: பிரதமர் மோடி மாநில உரிமைகளைப் பறிப்பது, மாநிலங்களுக்கான நிதியைத் தடுப்பது, தமிழகத்துக்கு சிறப்புத் திட்டத்தை மறுப்பது, மாநில மொழிகளைப் புறக்கணிப்பதை மட்டுமே செய்து கொண்டுள்ளார். அவர் மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார்.

கச்சத்தீவு விவகாரம்: கச்சத்தீவுக்காக இப்போது பேசும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த மீனவர்கள் கைது, துப்பாக்கிச்சூடு சம்பவங்களின்போது இலங்கைக்கு எதிராக எந்த கண்டிப்பும் செய்யவில்லை.

அருணாசல் விவகாரம்: தற்போது சீனா அருணாசல பிரதேசத்தின் பல பகுதிகளுக்கு சொந்தம் கொண்டாடுவதுடன், 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சீன மொழியில் பெயர்களை வைத்துள்ளது. அந்த வகையில், இலங்கையை கண்டிக்கவும், சீனாவை எதிர்க்கவும் துணிச்சல் இல்லாத பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை.

தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ரூ. 8,000 கோடி வசூலித்துள்ளது. இந்த ஊழலால் பிரதமர் தோல்விபயத்தில் உள்ளார்.

பிரதமர் பதவி ஏன்?: சட்டத்தின்மீது நம்பிக்கை வைத்து நீதிமன்றங்களை நாடுகிறோம். மாநிலங்கள் நீதி பெறவும், நிதி பெறவும் உச்சநீதிமன்ற கதவுகளைத் தான் தட்ட வேண்டும் என்றால் எதற்கு பிரதமர் பதவியில் இருக்கிறார் என்பதுதான் எனது கேள்வி.

இத்தகைய நிலைமையை மாற்றவே மாநில உரிமைகளுக்கான முழக்கத்தையும், கூட்டாட்சிக்கான குரலையும் எழுப்பி வருகிறாம். அதற்கு நீதிமன்றம் போன்றே மக்கள் மன்றமும் இந்தத் தேர்தலில் நியாயமான தீர்ப்பை எழுத வேண்டும் என்றார் மு.க.ஸ்டாலின்.

கூட்டத்தில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com