தடுப்பூசி தவணைகளை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை

தடுப்பூசி தவணைகளை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கை

குழந்தைகளுக்கு தடுப்பூசி தவணைகளை தவறவிடாமல் முறையாக செலுத்துவதை உறுதி செய்ய சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

சுகாதார மாவட்டங்கள் தோறும் தடுப்பூசி செயல்பாட்டுக்கு மதிப்பீடு வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 11 ஆயிரம் இடங்களில் அந்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், முதல் தவணைக்கு பிறகு அடுத்த தவணையை சில குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் பெற்றோா் செலுத்துவதில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக 100 சதவீத தடுப்பூசி இலக்கு அனைத்து இடங்களிலும் எட்டப்படுவதில்லை. எனவே, இதனைக் கண்காணிக்க சிறப்பு நடவடிக்கையை பொது சுகாதாரத் துறை முன்னெடுத்துள்ளது. அதன்படி, சுகாதார மாவட்டங்களில் 90 முதல் 95 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டால் 5 மதிப்பெண் அதற்கு வழங்கப்படும். 95 சதவீதத்துக்கு மேல் செயல்பாடு விகிதம் இருந்தால் 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.

ஒரு வேளை 90 சதவீதத்துக்கும் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் அந்த மாவட்டத்துக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களே வழங்கப்படும். அவ்வாறு எந்த சுகாதார மாவட்டம் தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கியுள்ளது என்பதைக் கண்டறிந்து அங்கு அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com