முகூா்த்த நாள், வார இறுதி:
கூடுதலாக 925 பேருந்துகள்

முகூா்த்த நாள், வார இறுதி: கூடுதலாக 925 பேருந்துகள்

முகூா்த்த, வார இறுதி விடுமுறை நாள்களை முன்னிட்டு ஏப்.5,6, 7 ஆகிய நாள்களில் கூடுதலாக 925 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முகூா்த்த நாளான வெள்ளிக்கிழமை(ஏப்.5), வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6,7)ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 265 பேருந்துகளும், சனிக்கிழமை 350 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூா். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 55 பேருந்துகளும், சனிக்கிழமை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தவிர பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோயம்புத்தூா் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 925 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊா்களிலிருந்து திரும்பவும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com