இஸ்லாமில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம்: நாகை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சி. கார்த்திகா

நாகூர் தர்காவில் மாலை நடைபெற்ற விழாவில் தினமணியின் ஈகைப் பெருநாள் மலரை நாகை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சி. கார்த்திகா வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறார் நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் எஸ். செய்யது முஹம்மது ஹாஜி ஹூசைன் சாஹிப். உடன் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்ஜிகே நிஜாமுதீன், 
மலர் தொகுப்பாளரும், தினமணியின் தலைமை உதவி ஆசிரியருமான அ.சர்ஃப்ராஸ்.
நாகூர் தர்காவில் மாலை நடைபெற்ற விழாவில் தினமணியின் ஈகைப் பெருநாள் மலரை நாகை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சி. கார்த்திகா வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கிறார் நாகூர் தர்கா நிர்வாக அறங்காவலர் எஸ். செய்யது முஹம்மது ஹாஜி ஹூசைன் சாஹிப். உடன் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்ஜிகே நிஜாமுதீன், மலர் தொகுப்பாளரும், தினமணியின் தலைமை உதவி ஆசிரியருமான அ.சர்ஃப்ராஸ்.

நாகப்பட்டினம்: பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை இஸ்லாம் அளிக்கிறது என்றார் நாகை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சி. கார்த்திகா.

நாகை மாவட்டம், நாகூரில் செவ்வாய்க்கிழமை மாலை தினமணியின் ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில், மலரை வெளியிட்டு அவர் மேலும் பேசியது:

பெண்களுக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற விமர்சனம் இருந்துள்ளது. ஆனால், இஸ்லாமிய பிரமுகர் ஒருவரை அழைக்காமல் என்னை அழைத்ததற்கு பெண்களுக்கு இஸ்லாம் சம உரிமை கொடுக்க ஆரம்பித்துவிட்டது என்று தான் பொருள்.

சிறுவயதில் முதலே இஸ்லாமிய கருத்துகளை கேட்டு கேட்டு வளர்ந்தவள் நான். குழப்பமான மன நிலையில் இருக்கும் வேளையில் எனது வீட்டில் வைத்திருக்கும் திருக்குரானின் பக்கங்களை திருப்பினால், அது எனது குழப்பத்துக்கு விடை கொடுப்பது போல இருக்கும்.

இந்த மலரை வெளியிட எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் பெருமைமிகு தருணமாக கருதுகிறேன். அல்லாவை திருப்திபடுத்தும் விஷயம் ஈகை மட்டுமே என்பது இஸ்லாம் சுட்டும் உண்மை. இல்லாதவர்களுக்கு கொடுக்கும்போதுதான் இறைவன் மகிழ்ச்சி அடைவான்.

இஸ்லாத்தின் கருத்துகளை பிற மதத்தினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ரமலான் கருத்துகளை அனைவருக்கும் கூற வேண்டும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என்றார் அவர்.

நிகழ்ச்சிக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார். மலரை நாகை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சி. கார்த்திகா வெளியிட அதை நாகூர் தர்கா பரம்பரை அறங்காவலர் எஸ். செய்யது முஹம்மது ஹாஜி ஹூசைன் சாஹிப் பெற்றுக்கொண்டார்.

தினமணி தலைமை உதவி ஆசிரியரும், மலர் தொகுப்பாளருமான அ.சர்ஃப்ராஸ் வரவேற்புரையாற்றினார். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்ஜிகே. நிஜாமுதீன் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியை ஆசிரியர் துரைக்கண்ணன் தொகுத்து வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா மற்றும் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள், தினமணி வாசகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இஸ்லாத்தை பிற சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும்: தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்

நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவுக்கு தலைமைவகித்து தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேசியது:

தினமணியின் ஈகைப் பெருநாள் மலரை நாகூர் தர்காவில் வைத்து வெளியிடுவது என்பது பெருமை.

மனதையும், உடலையும் கட்டுப்படுத்திவைத்து நோன்பு நோற்று மனிதனை ஒருங்கிணைத்து வழிநடத்தும் மிகப்பெரிய தத்துவத்தை உள்ளடக்கிய ஒரு திருநாள்தான் ஈகைப் பெருநாள்.

ஈகைப் பெருநாளுக்காக எதற்கு மலர் என்ற கேள்வி எழலாம்.

இது இஸ்லாமியர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அல்ல.இஸ்லாமிய சிந்தனைகளை மற்றவர்கள் எப்படி தெரிந்துகொள்வது?. ஏனைய சமுதாயத்தினருக்கு இஸ்லாமிய சமுதாயம் குறித்து ஒரு புரிதல் வரவேண்டும் என்பதற்காக.

இந்த மலர் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் படிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com