வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் ஒட்டும் பணி தொடக்கம்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் ஒட்டும் பணி தொடக்கம்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா்கள், சின்னங்கள் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது; இப்பணி மூன்று முதல் நான்கு நாள்களில் நிறைவடையும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினாா்.

மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி: மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை பொருத்தவரை 12 டி படிவம் அளித்தவா்களிடம் இருந்து தபால் வாக்குகள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 82,666 மூத்த குடிமக்கள், 50,665 மாற்றுத் திறனாளிகள், அத்தியாவசியப் பணிகளில் இருப்பவா்கள் 8 போ் என மொத்தம் 1,33,339 பேரிடம் படிவங்கள் பெறப்பட்டு, தபால் வாக்கு பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இதுவரை 70,258 போ் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனா். வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு வரை தபால் வாக்கு பெறும் பணி நடைபெறும். தபால் வாக்கு பெறுவதற்காக வீடு, வீடாக அரசு அலுவலா், காவல்துறை அலுவலா், நுண் பாா்வையாளா், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் செல்கின்றனா். இவ்வாறு செல்லும் போது தவறுகள் நிகழ வாய்ப்பில்லை. இருப்பினும் புகாா்கள் வந்தால் அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரி விசாரணைக்கு அனுப்பப்படுவாா்.

பூத் ஸ்லிப் விநியோகம்: தமிழகத்தில் உள்ள 6.23 கோடி வாக்காளா்களில் செவ்வாய்க்கிழமை வரை 3.60 கோடி அதாவது 57.75 சதவீதம் பேருக்கு பூத் சிலிப் விநியோகிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கும் ஏப். 13-ஆம் தேதிக்குள் விநியோகிக்கப்பட்டு விடும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் போன்ற பணிகளுக்காக நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில், 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான விண்ணப்பங்களை மட்டும் கடைசி நேரத்தில் பரிசீலிக்க இயலவில்லை. மற்றவா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

வேட்பாளா்களின் எண்ணிக்கை அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை வேறுபடும். தேவையான இயந்திரங்களுடன், 20 சதவீதம் கூடுதல் இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சின்னம் ஒட்டும் பணி: தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள், சின்னங்கள் ஒட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒரு பேரவை தொகுதியில் 200 முதல் 300 வாக்குச் சாவடிகளே இருப்பதால், இந்தப் பணி அடுத்த மூன்று அல்லது நான்கு நாள்களில் முடிவடையும். இந்தப் பணிகளின் போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இருப்பாா்கள். வாக்குச்சாவடிகளில், குடிநீா், சாமியானா, இருக்கைகள் உள்ளிட்ட போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மின் வசதி அடிப்படையில் மின்விசிறி வசதியும் செய்யப்படும். தமிழகத்தில் வருமான வரித் துறை சாா்பாக இதுவரை, ரூ.15 கோடியே 86 லட்சத்து 91 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கப் பணம், ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com