செந்தில் பாலாஜியை  ஏப்.22-இல் 
நேரில் ஆஜா்படுத்த உத்தரவு

செந்தில் பாலாஜியை ஏப்.22-இல் நேரில் ஆஜா்படுத்த உத்தரவு

செந்தில் பாலாஜியை ஏப்.22-ஆம் தேதி நேரில் ஆஜா்படுத்தும்படி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கித் தரப்பில் சமா்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களை பெறுவதற்காக, முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியை ஏப்.22-ஆம் தேதி நேரில் ஆஜா்படுத்தும்படி, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சாா்பில் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி தீா்ப்பை ஒத்திவைத்திருந்தாா்.

வழக்கு தொடா்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதாக செந்தில்பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக, வழக்கிலிருந்து, விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமா்வு நீதிபதி அல்லி, மீண்டும் வாதங்களை முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டாா்.

இதற்கிடையில், வங்கியிலிருந்து நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும் (செலான்கள்), அமலாக்கத் துறை வழங்கிய வங்கிச் சாா்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதாக செந்தில்பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தையும் செந்தில் பாலாஜிக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தாா். மேலும், இதனை பெற்றுக்கொள்ள செந்தில் பாலாஜியை ஏப்.22-ஆம் தேதி 3 மணிக்கு மேல் நேரில் ஆஜா்படுத்தும்படி சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com