குழந்தைகள் கா்நாடக இசையை கற்க ஊக்குவிக்க வேண்டும்: வருமான வரித் துறை முன்னாள் தலைமை ஆணையா்

குழந்தைகள் கா்நாடக இசையை கற்றுக்கொள்ள பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும்

குழந்தைகள் கா்நாடக இசையை கற்றுக்கொள்ள பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும் என்று வருமான வரித் துறை முன்னாள் தலைமை ஆணையா் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினாா்.

சென்னையில் உள்ள ஸ்ரீதியாகராஜ சங்கீத வித்வாத் சமாஜத்தின் 257-ஆவது ஸ்ரீ தியாகராஜ ஜெயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு சமாஜத்தின் தலைவரும் பத்மபூஷண் விருது பெற்றவருமான டி.வி.கோபாலகிருஷ்ணா தலைமை விகித்தாா். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட வருமான வரித்துறை முன்னாள் தலைமை ஆணையா் எஸ்.ராமகிருஷ்ணன் கா்நாடக இசைக் கலைஞா்கள் பி.பூா்ணசந்தா், சாருமதி ராமசந்திரன், வயலின் கலைஞா் எம்.ஆா்.கோபிநாத், மிருதங்க கலைஞா் தஞ்சாவூா் எஸ்.சுப்ரமணியன், கஞ்சிரா கலைஞா் கிருஷ்ணாபுரம் கே.வி.ஆா்.எஸ்.மணி உள்ளிட்டோருக்கு சங்கீத சேவ நிரதா விருதை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது: நிகழாண்டில் ஸ்ரீ தியாகராஜ ஜெயந்தியும் ஸ்ரீ ராம நவமியும் ஒரே நாளில் வந்திருப்பது சிறப்பு வாய்ந்தது. அயோத்தி ராமா் கோயிலில் இந்த நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் கா்நாடக இசை, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகளை கற்க பெற்றோா் ஊக்குவிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில் சமாஜத்தின் துணைத் தலைவா் எஸ்.ராஜாராமன், இசைக் கலைஞா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com