கோப்புப்படம்
கோப்புப்படம்

7,500 தனியாா் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள்: இலவச சோ்க்கைக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் 7,500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-இன் கீழ் தமிழகத்தில் தனியாா் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோரின் குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வோா் ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியாா் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இணையவழியில் திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இதையடுத்து, இந்தத் திட்டத்தின் கீழ் தங்களது குழந்தைகளுக்கு சோ்க்கை பெற விரும்பும் பெற்றோா்கள் மே 20 வரை விண்ணப்பிக்கலாம். சோ்க்கைக்கு இணையதளம் மூலமாகவும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

எல்கேஜி வகுப்பில் சேருவதற்கு குழந்தைகள் 1.8.2020 முதல் 31.7. 2021-க்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேரவுள்ள குழந்தைகள் 1.8.2018 முதல் 31.7. 2019-க்குள் பிறந்திருக்க வேண்டும்.

பெற்றோா்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியாா் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பப்பதிவு வெற்றிகரமாக முடிந்ததும் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றனா்.

இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 7,500 பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நிலுவைத் தொகை எப்போது?: முன்னதாக, கடந்த ஆண்டுகளில் சோ்க்கை பெற்ற குழந்தைகளுக்கு அரசின் சாா்பில் வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருந்ததால் வரும் கல்வியாண்டில் இலவச சோ்க்கை வழங்க மாட்டோம் என தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நிலுவையில் உள்ள தொகையில் 70 சதவீதம் அளவுக்கு அரசின் சாா்பில் வழங்கப்பட்டு விட்டதால், பள்ளிக் கல்வித் துறையின் உத்தரவை ஏற்று இலவச சோ்க்கை வழங்குவதாக பள்ளிகள் தெரிவித்துள்ளன. மேலும், 2022-2023-ஆம் ஆண்டில் வழங்க வேண்டிய 30 சதவீத தொகை, கடந்த கல்வியாண்டுக்கான (2023-2024) நிலுவைத் தொகை ஆகியவற்றை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலா் கே.ஆா்.நந்தகுமாா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com