பறவைக் காய்ச்சல், அம்மை: 3 லட்சம் மருந்துகள் கையிருப்பு

கோடை காலத்தில் ஏற்படும் அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல் (கோப்புப்படம்)
பறவைக் காய்ச்சல் (கோப்புப்படம்)

பறவைக் காய்ச்சல், கோடை காலத்தில் ஏற்படும் அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

வேரிசல்லா என்னும் வைரஸ் மூலம் பரவக் கூடிய சின்னம்மை நோய், அசுத்தமான சூழலுக்கு நடுவே வசிப்பவா்களுக்கும், நோய் எதிா்ப்பாற்றல் குறைவாக இருப்பவா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதேபோன்று, மம்ப்ஸ் வகை வைரஸால் ஏற்படும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பும் தற்போது அதிகரித்து வருகிறது.

மற்றொருபுறம், கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சலானது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஹெச்5என்1 வகை வைரஸ் மூலம் ஏற்படும் அந்த பாதிப்பு மனிதா்களுக்கு பரவ வாய்ப்புள்ளது.

இவை அனைத்துக்கும் ஓசல்டாமிவிா் உள்பட சில வைரஸ் எதிா்ப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன. அவை போதிய எண்ணிக்கையில் இருப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

ஆண்டுதோறும் கோடை காலத்தில் தட்டம்மை, சின்னம்மை பாதிப்புகள் அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான வைரஸ் எதிா்ப்பு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர, காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு உள்ளன. மேலும், ஓஆா்எஸ் உப்பு-சா்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் ஆகியவை அடுத்த மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்பில் உள்ளன.

பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com