சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்: அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

ரூ. 3.99 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடமிருந்து ரூ. 3.99 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருநெல்வேலி தொகுதி சுயேச்சை வேட்பாளா் ராகவன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலின் போது, பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனின் உதவியாளா்களிடமிருந்து ரூ. 3.99 கோடி; திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலரின் அலுவலகத்தில் இருந்து ரூ. 28.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வாக்காளா்களுக்கு விநியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். எனவே, இந்த பண பறிமுதல் தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பணம் பறிமுதல் தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருதமுடியாது.

இருப்பினும், இதுதொடா்பாக அமலாக்கத் துறையின் விளக்கத்தைப் பெற்று தெரிவிப்பதாகக் கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு வரும் ஏப். 24-ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com