சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

சித்திரை மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் புதன்கிழமை அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.

சிவபெருமானின் அக்னி தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமி நாள்களில் சித்தர்கள் கிரிவலம் வருவதாக கூறப்படுகிறது. எனவே, மாதம்தோறும் பல லட்சம் பக்தர்கள் இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து, செல்கின்றனர். சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி உலக பிரசித்தி பெற்றது.

சித்திரை மாத பௌர்ணமி...: நிகழாண்டுக்கான சித்திரை பௌர்ணமி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.21 மணிக்குத் தொடங்கியது. புதன்கிழமை அதிகாலை 5.54 மணிக்கு முடிவடைந்தது.

பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்...:அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம்.

அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணி வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

இதன்பிறகு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. மாலை 3 மணிக்குப் பிறகு மீண்டும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை படிப்படியாக கிரிவலம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், புதுவை மாநிலங்களைத் தவிர வெளிநாடுகள், வட மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பேர் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், அஷ்டலிங்க சந்நிதிகளில் தரிசனம் செய்தனர்.

விழாக்கோலம்...: தீபத் திருவிழாவைப் போலவே திருவண்ணாமலை நகரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது. மாட வீதிகள் அனைத்தும் விழாக்கோலம் பூண்டது. பூதநாராயண பெருமாள் கோயில் முதல் ராஜகோபுரம் வரை பக்தர்கள் வரிசையில் நின்று வருவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

உபயதாரர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடிநீர், மோர், தின்பண்டங்கள் வழங்கும் பணியை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இரா.ஜீவானந்தம், கோயில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர்கள் உ.மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ்.ராஜாராம், கோமதி குணசேகரன், இராம.பெருமாள் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

கட்டண தரிசனம் ரத்து... கோயிலில் ரூ.50-க்கான சிறப்பு கட்டண தரிசன வசதி ரத்து செய்யப்பட்டு, அனைவரும் கட்டணமில்லா தரிசனம் செய்தனர். முதியோர், கர்ப்பிணிகள், கைக் குழந்தையுடன் வந்த தாய்மார்கள் ராஜகோபுரம் வழியே அனுமதிக்கப்பட்டு எளிதில் சுவாமி தரிசனம் செய்தனர்.

2,500 சிறப்புப் பேருந்துகள்...திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளில் 11 தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தமிழக காவல்துறை வடக்கு மண்டலத் தலைவர் க.ச.நரேந்திரன் நாயர் தலைமையில் 5 ஆயிரம் போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com