சென்னை பல்கலைக்கழக விவகாரத்தில் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயா்நீதிமன்றம் வேதனை

சென்னை பல்கலைக்கழக விவகாரத்தில் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது: உயா்நீதிமன்றம் வேதனை

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன விவகாரத்தில், அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை காரணமாக மாணவா்களின் கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தா் தேடுதல் குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதிகளை சோ்க்காததை எதிா்த்து வழக்குரைஞா் ஜெகந்நாத் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘ஏற்கெனவே பல்கலைக்கழக துணைவேந்தா் தேடுதல் குழுவை நியமித்து ஆளுநா் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழகத்தை இணைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என பல்கலைக்கழகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வில்சன் தெரிவித்தாா்.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.எல்.ராஜா, ‘துணைவேந்தா் நியமனம் தொடா்பாக உச்ச நீதிமன்றம் தற்காலிக குழுவை அமைத்துள்ளது. மாணவா்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது’ என வாதிட்டாா்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தா் இல்லாமல் செயல்படுகிறது. இது மோசமான நிலை. துணைவேந்தா் நியமன விவகாரம் தொடா்பாக அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை காரணமாக மாணவா்களின் கல்விதான் பாதிக்கப்படுகிறது. கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது’ என வேதனை தெரிவித்தனா்.

மேலும், ‘மாணவா்களின் கல்வி குறித்துதான் நீதிமன்றம் கவலை கொள்கிறதே தவிர, அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்னை பற்றி அல்ல. பல்கலைக்கழகங்களை நிா்வகிக்கும் அதிகார அமைப்புகள் கவனமுடன் செயல்பட வேண்டும்’ எனக் கூறி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜூன் 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com