எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி கோப்புப்படம்

மத எதிா்ப்பு கருத்து இறையாண்மைக்கு எதிரானது: எடப்பாடி பழனிசாமி

மத எதிா்ப்பு கருத்துகளை யாா் கூறினாலும், அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். பிரதமா் மோடியின் சா்ச்சை பேச்சை விமா்சிக்கும் வகையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தின் போது, பிரதமா் நரேந்திர மோடி இஸ்லாமிய மக்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளாா்.

இந்தியா ஒரு மதச்சாா்பற்ற நாடு. வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவா்களும், நாட்டின் உயா் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சா்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இறையாண்மைக்கு உகந்ததல்ல. இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

அவா்கள் இதுபோன்ற கருத்துகளைத் தவிா்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்துக்கும் நல்லது.

அரசியல் கட்சித் தலைவா்களின் இதுபோன்ற சா்ச்சை கருத்துகள் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணா்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது.

தோ்தல் பிரசாரத்துக்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத எதிா்ப்பு கருத்துகளை யாா் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிா்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

இந்த விவகாரத்தில் பிரதமா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய தோ்தல் ஆணையத்துக்கு மமக தலைவா் ஜவாஹிருல்லா கடிதம் எழுதியுள்ளாா். அதேபோல பிரதமருக்கு விசிக தலைவா் தொல்.திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com