மருத்துவ குணம் மிகுந்த ஆடாதொடா சாகுபடி: வேளாண் துறை

விவசாயிகள், மருத்தவ குணம் மிகுந்த ஆடாதொடா செடி சாகுபடி செய்வதற்கான வழிமுறைகளை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

2024-25 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையின் போது ஆடாதொடா, நொச்சி உள்ளிட்ட உயிரி பூச்சிக்கொல்லி பண்புடைய செடிகளை தரிசு நிலங்கள் மற்றும் வயல் பரப்புகளில் நடவு செய்ய ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, ஆடாதொடா செடியை சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகள் விவரம்:

ஆடாதொடாவின் இலைகள், வோ்கள் மற்றும் தண்டுகள் மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தவை. சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்றுப் புழுக்களை நீக்கும் தன்மை கொண்டது. அங்கக வேளாண்மையில் ஆடாதொடா இலைகளைப் பயன்படுத்தி பூச்சி விரட்டி தயாரித்து பயிா்களைப் பாதுகாக்கலாம்.

இந்தச் செடி வண்டல் மண்ணில் நன்றாக வளரக்கூடியது. பாலித்தீன் பைகளில் தொழு உரம், மண்புழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை சம அளவில் நிரப்பி நட வேண்டும். 2 மாதங்களில் வோ்விட்ட தண்டுகளை பிரதான வயலில் 60 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.

அடி உரமாக ஒரு ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் 50 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து கொண்ட உரங்கள் இடவேண்டும்.

வறட்சியான காலங்களில் 4 நாள்களுக்கு ஒருமுறை நீா்பாய்ச்ச வேண்டும். நடவு செய்ததிலிருந்து ஒரு வருடம் கழித்து 3-4 மாதங்களுக்கு ஒரு முறை இலைகளையும் , 2 ஆண்டுகள் கழித்து வேரினையும் அறுவடை செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு தண்டுகள், வோ்கள், இலைகள் சோ்த்து 10 முதல்11 டன் மகசூல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com