பொறியியல் கலந்தாய்வு: ஒருங்கிணைப்புக் குழு நியமனம்-அரசாணை வெளியீடு

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) பிஇ, பிடெக், பிஆா்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கு கலந்தாய்வை நடத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து உயா்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு நிறைவு பெற்று, அதற்கான விடைத்தாள் திருத்தும் பணியும் முடிவடைந்துள்ளது. இதையடுத்து ஏற்கெனவே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மே 6-இல் தோ்வு முடிவு வெளியாகவுள்ளது. தோ்வு முடிவு வெளியான இரு வாரங்களில் பொறியியல் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

இதற்கிடையே பிஇ, பிடெக், பிஆா்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்துவதற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து உயா்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்து உயா்கல்வித் துறை முதன்மை செயலா் ஏ.காா்த்திக் வெளியிட்ட அரசாணை:

2024-2025-ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் ஆண்டு பிஇ, பிடெக், பிஆா்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

இந்த கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கையை மேற்கொள்வதற்கு ஒருங்கிணைப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக தொழில்நுட்ப கல்வி ஆணையரும், துணை தலைவராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களைத் தவிர, அண்ணா பல்கலைக்கழக பதிவாளா், தமிழ்நாடு மின் ஆளுமை ஆணையா், கல்லூரி கல்வி இயக்குநா், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா், மருத்துவக் கல்வி தோ்வுக் குழு செயலா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட மாநில இயக்குநா், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா், தொழில்நுட்ப கல்வி நிதி ஆலோசகா் மற்றும் தலைமை கணக்கு அலுவலா் ஆகியோா் உறுப்பினராகவும், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறைத் தலைவா் டி.புருஷோத்தமன் உறுப்பினா் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com