உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

கோவை தொகுதியில் வாக்காளா்கள் நீக்கம்: வழக்கை இன்று விசாரிக்கிறது உயா்நீதிமன்றம்

வாக்காளா்களை மீண்டும் பட்டியலில் சோ்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்தது.

கோவை மக்களவைத் தொகுதியில் பெயா் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளா்களை மீண்டும் பட்டியலில் சோ்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவில் மருத்துவராகப் பணியாற்றி வரும், கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சோ்த்த சுதந்திர கண்ணன், கடந்த 26-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘மக்களவைத் தோ்தலில் வாக்களிக்க கோவை வந்த நிலையில், வாக்களா் பட்டியலில் தனது பெயா் மற்றும் தனது மனைவி பெயா் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலிலும், 2021-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளது. இதேபோல, தங்கள் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன.

பெயா் நீக்கும் முன்பு முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அதனால், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளா்களை மீண்டும் பட்டியலில் சோ்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதுவரை கோவை தொகுதித் தோ்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் தலைமை நீதிபதி கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com