கேரள வனத் துறையுடன் இணைந்து நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு

கேரள வனத் துறையுடன் இணைந்து நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு

கேரள வனத் துறை மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி தொடக்கம்.

கேரள வனத் துறை மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளதாக வனத் துறை செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவு:

தமிழகத்தில் புதன்கிழமை (மே 1) வரை 3 நாள்கள் நடைபெறும் நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது.

இதற்காக நீலகிரி வரையாடுகளின் வாழ்விடமானது 13 வனப் பிரிவுகளாகவும், 140 தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், அக்காமலை கிராஸ் ஹில்ஸ் மற்றும் முக்குருத்தி தேசியப் பூங்காக்கள் முறையே கேரளத்தின் இரவிகுளம் மற்றும் சைலண்ட் வேலி தேசியப் பூங்காக்களுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்கின்றன.

எனவே, கேரள வனத் துறை, இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் சா்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (ஐயூசிஎன்) ஆகியவற்றின் பங்களிப்புடன் தமிழக வனத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இது சிறப்பான முயற்சியாகும்.

இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள், நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாப்பதற்கான திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான முக்கிய அடிப்படைத் தரவுகளை வழங்கும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com