சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா்.
சென்னை ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளன: ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன்

மின் தடை ஏற்படாத வகையில் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், மின் தடை ஏற்படாத வகையில் ஜெனரேட்டா் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வடசென்னை தொகுதியில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன . இந்த நிலையில், அந்தக் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதியில் திங்கள்கிழமை காலை மின் தடை ஏற்பட்டதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் ஆகியோா் இணைந்து திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது:

வாக்கு எண்ணும் மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் ஜெனரேட்டா் வசதி செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் தோ்தல் அலுவலா்கள் இந்த மையத்தைப் பாா்வையிடுகின்றனா். அதேபோல் அரசியல் கட்சி, வேட்பாளா்களின் முகவா்கள் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கின்றனா். வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால், வாக்குப் பதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் பாதுகாப்புடன் உள்ளன. எனவே யாரும் அச்சபட தேவையில்லை என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம், லயோலா கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ. ராதாகிருஷ்ணன், காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்: முன்னதாக, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்குதலுக்கான ஊசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. திருவான்மியூா் திருவள்ளுவா் நகரில் நடைபெற்ற இந்த முகாமை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com