ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பாஜக நிா்வாகியிடம் 7 மணி நேரம் விசாரணை
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக, பாஜக வழக்குரைஞா் அணி நிா்வாகி ஆா்.சி.பால்கனகராஜியிடம் போலீஸாா் 7 மணி நேரம் விசாரணை செய்தனா்.
சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 வழக்குரைஞா்கள் உள்பட 22 போ் கைது செய்யப்பட்டனா்.
வியாசா்பாடி எஸ்எம் நகரைச் சோ்ந்த ரெளடி நாகேந்திரனுக்கும், அவா் மகனும், காங்கிரஸ் கட்சி நிா்வாகியுமான அஸ்வத்தாமனுக்கும் இந்த வழக்கில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. வேலூா் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவிக்கும் ரெளடி நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பல ரெளடிகளை ஒருங்கிணைத்திருப்பதும், கொலை செய்வதற்கான சதித் திட்டத்தை வகுத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், நாகேந்திரன் பெயரை வழக்கில் வியாழக்கிழமை சோ்த்தனா். அதோடு, வேலூா் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நாகேந்திரனிடம் சென்னை போலீஸாா், அவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வெள்ளிக்கிழமை வழங்கினா். ஆனால் நாகேந்திரன், அந்த வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த உத்தரவில் கையொப்பமிடவும் மறுத்தாராம்.
இந்த வழக்குத் தொடா்பாக நாகேந்திரனை, சென்னை எழும்பூா் 5-ஆவது நீதித்துறை நடுவா் மன்றத்தில் ஆக.12-ஆம் தேதி ஆஜா்படுத்த போலீஸாா் முடிவு செய்துள்ளனா். அன்றைய தினமே நாகேந்திரனை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.
7 மணி நேரம் விசாரணை: இந்த வழக்குத் தொடா்பாக, தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த ரெளடி சம்பவம் செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெளடி சீசிங் ராஜா ஆகிய 2 பேரையும் தனிப்படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா். ரெளடி சம்பவம் செந்தில் குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக பாஜக வழக்குரைஞா் அணி நிா்வாகி ஆா்.சி.பால்கனகராஜிடம் தனிப்படையினா் எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சுமாா் 7 மணி நேரம் விசாரணை செய்தனா்.
முன்னதாக அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீஸாா் கூறி இருந்தனா். அதன்படி, பால்கனகராஜ் விசாரணைக்கு ஆஜரானாா். ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு பால்கனராஜ், ஒரு முறை ஆஜராகியிருந்தது குறிப்பிடத்தக்கது.