வேலூர்: பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமின்றி தொழுநோயாளிகள், மாற்றுத் திறனாளிகள் திருநங்கைகள் போன்ற குரலற்ற மக்கள் சமூகத்துக்கும் ஆதரவுக்கரமாக செயல்பட்டவர் கருணாநிதி என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி புகழாரம் சூட்டினார்.
தமிழியக்கம், விஐடி பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வேலூர் விஐடி பல்கலைக்கழக அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி நெகிழ்வுரையில் பேசியது:
இந்தியாவில் 4 இடங்களில் விஐடி பல்கலைக்கழக வளாகங்களை உருவாக்கியுள்ள கோ.விசுவநாதன், அடுத்த வளாகத்தை தூத்துக்குடியில் தொடங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். கருணாநிதி குறித்தும் அவரது அரசியல் பயணம், மக்கள் தொண்டு, எழுத்துத் திறன் குறித்துப் பேச பலரும் உண்டு. அவரது மகளாக எனக்கு அத்தனையுமாக இருந்தவர். அவருடன் இருக்கும் நேரங்கள் எப்போதும் மகிழ்ச்சி தரக்கூடியவை.
கருணாநிதி பார்க்காத வெற்றி, தோல்வி, அவமானம் கிடையாது. எதற்கும் அவர் தளர்ந்துவிடவில்லை. அவர் வாழ்நாள் மட்டுமின்றி அவர் மறைந்த பிறகும் போராடித்தான் வெற்றி கண்டார். அவரை இளைஞர்கள் முன்மாதிரியாக கொள்ள வேண்டும்.
கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில் பொதுவிநியோகத் திட்டம், குடிசை மாற்று வாரியம், பெண்களுக்கு காவலர் பணி, பெண் கல்வியை ஊக்குவிக்க திருமண நிதியுதவி என எத்தனையோ முன்னோடி திட்டங்களை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் தந்து விவசாயத்தை பாதுகாத்தவர்.
பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமின்றி அவர் வாக்கு வங்கியாக இல்லாத தொழு நோயாளிகள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் போன்ற குரலற்றவர்களுக்காகவும் ஆதரவுக்கரமாக செயல்பட்டவர். உலகில் யாரும் குறைகள் இல்லாத முழுமைபெற்றவர்கள் இல்லை. ஏதாவது ஒரு இடத்தில் தவறு செய்யக் கூடியவர்கள்தான். அப்படி தவறு செய்த நண்பர்களை அவர்கள் முன்பு செய்த நன்மைகளை எண்ணி மன்னித்து ஏற்றுக்கொண்ட ஒப்பற்ற தலைவராகவும் விளங்கியவர் கருணாநிதி.
உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கை பிடிப்புடன் திகழ்ந்தவர். அவசர நிலை காலகட்டத்தில்கூட ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியை இழந்தவர். அவர் எப்போதும் தனது கொள்கைகளை எதற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுத்ததில்லை என்றார்.
கவிஞர் வைரமுத்து விழா பேருரையில் பேசியது:
வயது தாண்டி சாதனை படைத்தவர் கருணாநிதி. அவரை இளைஞர்கள் பல வழிகளில் பின்பற்றலாம். சாதிப்பதற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என நிரூபித்தவர் கருணாநிதி. அவர் அத்தனை சமூகத்தையும் மேம்படுத்தியவர். சிறுவயதிலிருந்து மரணத்தின் முன் நிமிடம் வரை பகுத்தறிவாளனாக வாழ்ந்து மறைந்தார். மாணவர்கள் அண்ணா, கருணாநிதியின் எழுத்துக்கள், சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை வாய்விட்டு வாசிக்க வேண்டும். கருணாநிதியின் எழுத்துக்களை வாய்விட்டு வாசித்துத்தான் நான் எனது தமிழை வளர்த்துக் கொண்டேன்.
புதிதாக சிலர் அரசியல் கட்சி தொடங்குகின்றனர். ஒரு கட்சிக்கு மூலதனம் என்பது தொண்டர்களோ, கட்டமைப்போ இல்லை. பகைதான் அதற்கு மூலதனம். எதிரி இல்லை என்றால் வெற்றி கிடைக்காது. ஆங்கிலேயர் என்ற நல்ல எதிரி கிடைத்ததால்தான் மகாத்மா காந்தி வென்றார். ஆரியம் எனும் எதிரியால்தான் திமுக வளர்ந்தது. அதுபோல் எம்ஜிஆருக்கு எதிரியாக கருணாநிதி இருந்தார். அதனாலேயே எம்ஜிஆரால் வெற்றி பெற முடிந்தது. எதிரியை வைத்துத்தான் அரசியல் கட்சியின் வெற்றியும், தோல்வியும் அமையும். கருணாநிதி எதிரிகளை உண்டாக்கிக் கொண்டே இருந்தார். தடைகற்களை படி கற்களாக மாற்றினார்.
செங்கோல் இல்லை என்றால் எழுதுகோல் உள்ளது என சாதித்து காட்டினார். உழைப்பு, எதிரிகளை எப்படி கையாள்வது என்பதையும், துணிச்சலுடன் எப்படி வாழ வேண்டும் என்பதை கருணாநிதியிடம் கற்றுக்கொள்ளலாம் என்றார்.
தமிழியக்கத்தின் நிறுவனர் } தலைவரும், விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:
ஒரு சாதாரண மனிதரும் வளர்ந்து தலைவராகவும், சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் கருணாநிதி.
பள்ளிப் படிப்புடன் நின்றுவிட்டாலும் தனது முயற்சியால் தொல்காப்பியத்துக்கு உரை எழுதும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டவர். அவரிடம் இருந்து பலவற்றை தமிழக மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுதந்திர தினம், குடியரசு தினத்தில் ஆளுநர்கள்தான் தேசியக் கொடி ஏற்றும் நிலையை மாற்றி, மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றுத் தந்தவர். பெண்களுக்கு காவல் துறையில் வாய்ப்பு, பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பு என தமிழகத்தில் அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். அவர் உருவாக்கிய திருவள்ளுவர் சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நிற்கும்.
தனது 14 வயதிலேயே அரசியலுக்கு வந்த கருணாநிதி, மிகச்சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, நாடகம், சினிமா வசன கர்த்தாவாக திகழ்ந்தார். அவர் எழுதிய 108 புத்தகங்களை இளைஞர்கள் படிக்க வேண்டும்.
மத்திய அரசுடன் நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டிருந்தாலும், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதில் உறுதியாக இருந்தவர் கருணாநிதி. அவர் நாட்டுக்காகவே வாழ்ந்தவர். அவரது குடும்பமும் நாட்டுக்காக வாழ்ந்து கொண்டுள்ளனர் என்றார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வாழ்த்திப் பேசினர்.
விழாவில், வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), ஜெ.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), அமலு விஜயன் (குடியாத்தம்), வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், கோ.வி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் வாழ்த்து
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியிருந்தார். இந்த வாழ்த்துக் கடிதம் விழாவில் வாசிக்கப்பட்டது. முன்னதாக, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, டி.எம்.கதிர்ஆனந்த், சட்டப் பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், விழாவில் கருணாநிதியுடன் இருந்த அலுவலர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.