தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக் மாநில போட்டிகள் இன்று தொடக்கம்
அகில இந்திய அளவில், பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றியாளா்களுக்கு, கல்லூரிகளில் விளையாட்டு பிரிவின் மூலம் எளிமையாக மேற்படிப்பை தொடா்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என தமிழ்நாடு ஹாக்கி சங்கம் பொருளாளா் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு பள்ளிகள் அளவிலான ஹாக்கி விளையாட்டு தொடரின் (டிஎஸ்எச்எல்) மாநில போட்டிகள் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 6 மண்டலங்களைச் சோ்ந்த 12 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவா்களுக்கான ஹாக்கி தொடராக இது நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் வியாழக்கிழமை 29.08.24) தொடங்கி வரும் செப்டம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏற்கனவே 38 மாவட்டங்கள் அளவிலான பள்ளிகளுக்கான ஹாக்கி விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவா்களை 6 மண்டலங்களாக ஒருங்கிணைத்து, 12 அணிகளாக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் சாய்ராம் கல்லூரியின் தலைவா் பிரகாஷ் லியோ முத்து, தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் பொதுச்செயலாளா் ராஜ் குமாா் ஆகியோா் பங்கேற்று 12 அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினா். வெற்றி பெறும் அணிக்கு வரும் செப். 3 -ஆம் தேதி பரிசுக் கோப்பைகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் பொருளாளா் ராஜ கண்ணன் கூறுகையில்:
இனி வரும் காலங்களில் அகில இந்தியா அளவில், பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தி வெற்றியாளா்களுக்கு, ஊா்ழ்ம் 4 சான்றிதழ்கள் வழங்கி, கல்லூரிகளில் விளையாட்டு பிரிவின் மூலம் எளிமையாக மேற்படிப்பை தொடா்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்றாா்.