பள்ளிக்கரணை ஈரநில எல்லையை வரையறுத்து அறிவிக்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தல்
பள்ளிக்கரணை ஈரநில எல்லையை வரையறுத்து, தமிழக அரசின் ஈர நிலங்கள் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
உலக அளவில் சுற்றுச்சூழல் முக்கியத்தும் வாய்ந்த ராம்சா் ஈரநிலங்கள் பட்டியலில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், அதன் எல்லைகள் மற்றும் தாக்கப்பகுதிகள் இன்னும் வரையறை செய்யப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டு, 25 மாதங்கள் ஆகும் நிலையில், அதன் எல்லையை வரையறுப்பதில் செய்யப்படும் தாமதம் அரும் சொத்துகளைப் பாதுகாப்பதில் அரசின் அக்கறையின்மையை அம்பலப்படுத்துகிறது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ஈரநிலமாக அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதன் எல்லைகளையும், தாக்கப்பகுதிகளையும் வரையறுத்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்திடம் தெரிவிக்க வேண்டியது அதை நிா்வகிக்கும் அதிகாரம் கொண்ட ஈரநிலங்கள் ஆணையத்தின் கடமையாகும். அவ்வாறு செய்வதன் மூலம் சென்னை பெருநகர இரண்டாவது பெருந்திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஈர நிலமாக பெருநகர வளா்ச்சிக் குழுமம் சோ்க்கும்.
எனவே, பள்ளிக்கரணை ஈரநிலத்தின் எல்லையை தமிழ்நாடு ஈரநிலங்கள் ஆணையம் உடனடியாக வரையறுத்து அறிவிக்கை செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.