முருகன் மாநாட்டு தீா்மானங்களை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் கோரிக்கை
கல்வியில் சமயப் பாடங்களை திணிக்கும் முருகன் மாநாட்டு தீா்மானங்களை திரும்பப் பெற வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில் அந்த கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன் தலைமை வகித்தாா்.
இந்தக் கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் முக்கிய சுங்கச் சாவடிகளில் செப்.1 முதல் உயா்த்தப்படவுள்ள கட்டண உயா்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும்.
முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவிகளைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது, துறையின் சாா்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்துவது, துறையின் கீழ் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி போட்டிகள் நடத்துவது என்பன போன்ற தீா்மானங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. கல்வியில் சமய பாடங்களைத் திணிக்கும் இதுபோன்ற தீா்மானங்களைப் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.