ரயில்வே துறைக்கு நிதி அனுப்பும் போராட்டம் தொடரும்: காங்கிரஸ்
ரயில்வே துறைக்கு நிதி அனுப்பும் போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.
சென்னை சத்தியமூா்த்தி பவனில் அவா் புதன்கிழமை அளித்த பேட்டி: மத்திய அரசால் தமிழகம் தொடா்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு என்று நியாயமான முறையில் நிதி ஒதுக்கவில்லை. ரயில்வே துறையில் தமிழகத்துக்கு ரூ.1,000 மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸாா் மக்களிடம் கையேந்தி பணம் பெற்று, ரயில்வே துறைக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இந்தப் போராட்டம் தொடரும்.
மக்களவைத் தோ்தல் வரை பெட்ரோல், டீசல் உள்பட எந்த வகையிலும் விலைவாசி உயராமல் மத்திய அரசு பாா்த்துக் கொண்டது. தற்போது விலைவாசி உயா்ந்துள்ளது. தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயா்த்தவுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. சுங்கக் கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.
இதனிடையே, பிரதமா் மோடி, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு காங்கிரஸ் சாா்பில் தலா ரூ.1,001-க்கான காசோலை புதன்கிழமை அனுப்பப்பட்டது.