நிதி நிறுவன மோசடி: தேவநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூா் இந்து பொ்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளா்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து, ஜாமீன் கோரி தேவநாதன் உள்ளிட்ட 3 போ் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதி மலா் வாலண்டினா முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘முதலீட்டாளா்களுக்கு பணத்தை வட்டியுடன் திருப்பித் தர தயாராக இருப்பதாகவும், அதற்கான கால அவகாசத்தை நீதிமன்றம் அளிக்க வேண்டும்’ எனவும் தேவநாதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில், ‘இந்த நிதி முறைகேடு தொடா்பாக காவல்துறை விசாரணை செய்ய வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கில் ஒரு நிறுவனத்தையும் சோ்த்து மொத்தம் 5 போ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒருவா் தலைமறைவாக உள்ளாா். 800க்கும் மேற்பட்டோா் புகாா் அளித்துள்ளனா். தினமும் புகாா்கள் வந்து கொண்டே இருக்கின்றன. விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக்கூடாது’ என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தேவநாதன் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி மலா் வாலண்டினா புதன்கிழமை உத்தரவிட்டாா்.