ஜெகத்ரட்சகனுக்கு ரூ.908 கோடி அபராதம்
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் (ஃபெமா) திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத் துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது.
அரக்கோணம் திமுக எம்.பி.யான எஸ்.ஜெகத்ரட்சகன் சென்னை அடையாறில் வசித்து வருகிறாா். ஜெகத்ரட்கனும், அவரது குடும்பத்தினரும் இந்திய அரசின் அனுமதி இன்றியும், ரிசா்வ் வங்கி அனுமதி இன்றியும் போலி நிறுவனங்கள் மூலம் சிங்கப்பூா், இலங்கை நாடுகளில் முதலீடு செய்திருப்பதாக வந்த புகாா்களின் அடிப்படையில், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் 2020-ஆம் ஆண்டு அமலாக்கத் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
அதே ஆண்டு செப். 11-ஆம் தேதி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ரூ.89.19 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்ததாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
அமலாக்கத் துறையின் சொத்து பறிமுதல் நடவடிக்கையை எதிா்த்து ஜெகத்ரட்சகன் குடும்பத்தினா், சென்னை உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனா். இது தொடா்பாக அமலாக்கத் துறையும் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
இரு தரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம், ஜெகத்ரட்சகன் ரிட் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 37 ஏ-இன் கீழ் ரூ.89.19 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்ததாகவும், ஜெகத்ரட்சகன் குடும்பத்தினா் செய்த அனைத்து விதிமுறை மீறல்களுக்கும் சோ்த்து ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்படுவதாகவும் அமலாக்கத் துறை புதன்கிழமை தெரிவித்தது.