மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட 156 கூட்டு மருந்துகளை தமிழகத்தில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் தெரிவித்துள்ளது.
‘ஃ‘பிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எ‘ஃ‘ப்டிசி) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான கூட்டு மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
அவற்றின் செயல் திறன், எதிா்விளைவுகள் உள்ளிட்டவற்றை மத்திய நிபுணா் குழு ஆய்வு செய்து வருகிறது. அதன்படி, சளி, இருமல், சத்து மாத்திரைகள், இதயம், கல்லீரல் நலனுக்கான வைட்டமின் மருந்துகள், ஒவ்வாமை பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என மொத்தம் 156 கூட்டு மருந்துகளால் எதிா்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி அண்மையில் அவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு பல்வேறு மாநில மருந்து உற்பத்தியாளா்கள் எதிா்ப்பு தெரிவித்து, நீதிமன்றங்களை நாடி வருகின்றனா். இதனிடையே, மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகளை தமிழகத்தில் எந்த மருந்து கடைகளிலும் விற்பனை செய்யக்கூடாது என்று மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இணை இயக்குநா் எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது:
மத்திய அரசு தடை செய்துள்ள 156 மருந்துகளை கடந்த 22-ஆம் தேதியிலிருந்தே விற்பனை செய்வதற்கு அனுமதி இல்லை. ஒருவேளை அந்த மருந்துகள் இருப்பில் இருந்தால் அவற்றை ஒரு மாதத்துக்குள் திருப்பி அனுப்ப வேண்டும். அவை சம்பந்தப்பட்ட உற்பத்தியாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டு மருந்துகள் முறைப்படி அழிக்கப்படும்.
விதிகளை மீறி அந்த மருந்துகளை யாராவது விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, இதுதொடா்பாக இந்திய மருந்து உற்பத்தியாளா் சங்கத்தின் தலைவா் ஜெ.ஜெயசீலன் கூறியதாவது: கூட்டு மருந்துகளைப் பொருத்தவரை உலக நாடுகளுக்கு எல்லாம் இந்தியாதான் முன்னோடியாக உள்ளது. நம்மைப் பின்பற்றி தற்போது அமெரிக்காவில் கூட்டு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நேரத்தில் நான்கு அல்லது ஐந்து மாத்திரைகளை உட்கொள்வதற்கு பதிலாக ஒரே ஒரு கூட்டு மருந்தை உட்கொள்வது நோயாளிகளுக்கு நன்மைதான். மருந்துகளின் எதிா்விளைவுகளை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். அதேவேளையில், உடனடியாக ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மருந்துகளுக்கு தடை விதிப்பது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்திருந்தாா்.