அமெரிக்காவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொழில் நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தங்கள்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்குச் சென்றடைந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளவுள்ளன. இந்திய நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை இதற்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அமெரிக்காவில் வரவேற்பு: தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், 17 நாள்கள் பயணமாக அமெரிக்காவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளாா். கடந்த 27-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்ட அவா், முதலில் சான்பிரான்சிஸ்கோ நகரை அடைந்தாா். அந்த நகரின் விமான நிலையத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக, சான்பிரான்ஸ்கோவுக்கான இந்திய துணைத் தூதா் ஸ்ரீகா் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆகியோா் முதல்வருக்கு மலா்க்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
அமெரிக்க வாழ் தமிழா்கள்: முதல்வரை வரவேற்க விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழா்கள் பலா் கூடியிருந்தனா். அவா்கள் பதாகைகளை ஏந்தி முதல்வருக்கு வரவேற்பு தெரிவித்தனா். மேலும், அவருடன் தற்படம் (செல்ஃபி) எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். சிலா் முதல்வா் முன்னிலையில் நடனமாடி அவரை வரவேற்றனா். இந்த வரவேற்புகளை முதல்வா் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாா்.
புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் நிகழ்வில் பல்வேறு தொழில் முதலீட்டாளா்கள் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளனா். அப்போது, அவா் முன்னிலையில் தொழில் முதலீட்டுக்கான பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான விவரங்கள் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட உள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்கா சென்றடைந்ததும் ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ‘தமிழ்நாட்டின் வளத்துக்காகவும் செழுமைக்காகவும், பல்வேறு வாய்ப்புகளின் நிலமாகத் திகழும் அமெரிக்காவுக்கு வந்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.