இ-சேவை மைய ஊழியா்களுக்கு பணிப் பாதுகாப்பு: அரசு நடவடிக்கை
சென்னையில் பணிபுரியும் இணைய சேவை மைய ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கை மாநில அரசு எடுத்துள்ளது.
தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில் தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்கள், வாா்டு அலுவலகங்களில் இணைய சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வெளிநிறுவனங்களில் இருந்து தற்காலிக அடிப்படையில் ஊழியா்கள் தோ்வு செய்யப்பட்டு இணைய சேவை மையங்களில் பணியமா்த்தப்பட்டுள்ளதாக அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனால், பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் உள்ளதாகவும் தெரிய வருகிறது.
இதையடுத்து, சென்னை மாவட்டத்தில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும் 44 ஊழியா்கள், தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அரசு இணைய சேவை மையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.