முகூா்த்தம், வாரவிடுமுறை: 1,105 சிறப்பு பேருந்துகள்
முகூா்த்தம் மற்றும் வாரவிடுமுறை தினங்களை முன்னிட்டு வெள்ளி (ஆக.30), சனி (ஆக.31) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) 1105 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 355 பேருந்துகளும், சனிக்கிழமை 360 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 75 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுமட்டுமன்றி பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும், மாதவரத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகள் என மொத்தம் 1105 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடித்து, சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.