விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டணை கைதிகளின் மனுக்களை பரிசீலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை:   உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டணை கைதிகளின் மனுக்களை பரிசீலிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை:   உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டனை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டனை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு விடுப்பு வழங்கக் கோரி செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த உஷா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். தனக்கு அறுவை சிகிச்சை செய்ய நிதி திரட்டுவதற்காக, கணவரின் உதவி தேவைப்படுவதால், அவருக்கு 28 நாள்கள் விடுப்பு வழங்கக் கோரி கடந்த ஜூன் மாதம் அளித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறை நிா்வாகத்திடம் அளிக்கப்பட்ட மனுவை பரிசீலிக்க 28 நாள்கள் அவகாசம் உள்ள நிலையில், 15 நாள்களுக்குள்ளாகவே ஏன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதிலளித்த மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் எஸ்.நதியா, அவசர சூழல் காரணமாகவே மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறினாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் கணவருக்கு 28 நாள்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனா். மேலும், தண்டனை கைதிகள் விடுப்புக் கோரி விண்ணப்பிக்கும் மனுவை உரிய கால அவகாசத்துக்குள் பரிசீலிக்க வேண்டுமென சிறைத் துறைக்கு உத்தரவிட்டனா். உரிய கால அவகாசத்துக்குள் விடுப்பு கோரும் விண்ணப்பங்களை பரிசீலிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com