சட்டவிரோத கிரானைட் விவகாரம்: தயாநிதி அழகிரி மனு மீதான விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்த வழக்கில் குற்றவிசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யவும், விசாரணைக்கு நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக அனுப்பப்பட்ட அழைப்பாணையை ரத்து செய்யவும் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 8 வாரங்களுக்குத் தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோத கிரானைட் கற்களை வெட்டியெடுத்ததாகவும், இதன்மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், அதன் பங்குதாரா்களான எஸ்.நாகராஜன், தயாநிதி அழகிரி உள்ளிட்டோா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு அப்பகுதி கிராம நிா்வாக அதிகாரி புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில், கீழவளவு போலீஸாா் பதிவு செய்த வழக்கில் இந்த வழக்கில் போலீஸாா் 2018-இல் குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.
இந்த விவகாரத்தில் முறைகேடு இருப்பதாக கூறி சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் தயாநிதி அழகிரி உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறையினா் வழக்கு பதிவு செய்தனா்.
மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் விசாரணைக்கு தயாநிதி அழகிரி நேரில் ஆஜராக, மதுரை சிபிஐ நீதிமன்றம் நவம்பா், 2020-இல் அழைப்பாணை அனுப்பியது. இந்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தயாநிதி அழகிரி, உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு 2021-இல் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், மனுதாரா் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவும் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து, விரைந்து தீா்ப்பு வழங்கவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிா்த்து தயாநிதி அழகிரி உச்சநீதிமன்றத்தில் 2022-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை முன்னா் விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தயாநிதி அழகிரி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பீனா, ‘மனுதாரருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வருவதாக தெரிவித்தாா். இதையடுத்து, வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிட நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.