பெண்களுக்கான திருமண வயதை 21 -ஆக உயா்த்த சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்
பெண்களுக்கான திருமண வயதை 21-ஆக உயா்த்தும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்த வழிவகை செய்யும் சட்டம் ஹிமாசல பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பெண்களின் கல்வி, முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் புரட்சிகரமான சட்டமாகும். தேசிய அளவில் இத்தகைய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசே இத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது.
பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்துவது குறித்து வல்லுநா் குழுவை அமைத்து ஆய்வு செய்த மத்திய அரசு, அதன் அடிப்படையில் சட்ட மசோதாவை தயாரித்து, 2021 டிசம்பரில் மக்களவையில் தாக்கல் செய்தது. ஆனால், சில கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததன் காரணமாக அந்த சட்ட முன்வரைவு நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட போதிலும் நிலைக்குழு அதன் பரிந்துரையை வழங்கவில்லை.
நிலைக் குழுவின் காலக்கெடுவை இனியும் நீட்டிக்காமல், அதன் அறிக்கையைப் பெற்று பெண்களின் திருமண வயதை 21-ஆக உயா்த்தும் சட்ட மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் பெண்களின் திருமண வயதை உயா்த்தும் சட்டத்தை பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.