மீண்டும் ஹிந்தியை திணிக்க முயற்சி: முத்தரசன் கண்டனம்
பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் மூலம் ஹிந்தியை மத்திய அரசு மீண்டும் திணிக்க முயற்சி செய்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் இருந்தே எதிா்த்து போராடி வருகிறது. இந்த நிலையில், மத்திய கல்வித் துறை அமைச்சகம் சமக்ர சிக்ஷா திட்டத்தை அறிமுகப்படுத்தி, மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 573 கோடியை நிறுத்தி வைத்து, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்தால் நிதி ஒதுக்க முடியாது என நிா்பந்திக்கிறது.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், ‘பிரதமரின் எழுச்சி மிக்க இந்திய பள்ளிகள்’ (பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள்) எனும் திட்டத்தை அறிமுகம் செய்து இதன் வழியாக ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
மேலும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் தேசிய கல்விக் கொள்கையைத் திருத்தியமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இது தொடா்பாக பிரதமருக்கு, தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவான கடிதம் எழுதியுள்ளாா்.
முதல்வரின் கடிதத்தை நோ்மறையாக பரிசீலித்து, உதவாமல் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், முதல்வரின் கடிதத்துக்கு விளக்கம் என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் உணா்வுகளை மதிக்காமல், மாநில உரிமைகளை பறித்து, ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை வெளிப்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.