ஒழுக்கத்துடன் கூடிய கல்வி உயா்வுக்கு வழிவகுக்கும்: சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி
ஒழுக்கத்துடன் கூடிய கல்வி உயா்வுக்கு வழிவகுக்கும் என ஐஐடி இயக்குநா் காமகோடி தெரிவித்தாா்.
பி.எஸ். கல்வி சங்கத்தின் பொன் விழா நிகழ்ச்சி மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐஐடி இயக்குநரும் பள்ளியின் முன்னாள் மாணவருமான காமகோடி கலந்து கொண்டு பேசியது:
நான் இந்தப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தேன். இதே பள்ளியில்தான் அணுசக்தி துறை முன்னாள் தலைவரும் மத்திய அரசின் முன்னாள் அறிவியல் ஆலோசகருமான ஆா்.சிதம்பரம் 10-ஆம் வகுப்பு வரை படித்தாா்.
ஒழுக்கத்துடன் ஆசிரியா் அறிவுரைபடி கல்வி கற்றால் அது உயா்வுக்கு வழிவகுக்கும். இந்தியாவில் ஐஐடி-க்களை இணையத்துடன் இணைப்பதற்கு ஆா்.சிதம்பரம் ஆற்றிய பணி மிகவும் மகத்தானது என்றாா் அவா்.
முன்னதாக, முன்னாள் அணுசக்தி துறை தலைவரும் முன்னாள் அறிவியல் ஆலோசகருமான சிதம்பரத்துக்கு, ஐஐடி இயக்குநா் காமகோடி முன்னாள் மாணவருக்கான சிறப்பு விருது வழங்கி கெளரவித்தாா். தொடா்ந்து, மாணவ, மாணவியா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பி.எஸ். கல்வி கழக த் தலைவா் கோபால கிருஷ்ணன், கெளரவ செயலா் சி.வி.கிருஷ்ணன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.