ஃபென்ஜால் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.1000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த உள்துறையின் பேரிடர் மேலாண்மைத் துறை இணைச் செயலர் ராஜேஷ்குப்தாவிடம் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பொன். கெளதமசிகாமணி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் ஃபென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டம் கடுமையான பாதிப்பைச் சந்தித்து உள்ளது. மக்கள் உடைமைகளை இழந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வீடுகள் சேதமடைந்துள்ளனர். மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.
எனவே விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளவும் - மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செய்யவும் மத்திய அரசு சார்பில் ரூ.1000 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
அப்போது திமுக துணைப் பொதுச் செயலரும், வனத்துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலருமான க. பொன்முடி, எம்எல்ஏக்கள் இரா. லட்சுமணன், அன்னியூர் அ.சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.