நடிகர் சிவாஜியுடன் அரசியல் பயணம்! பெரியார் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

நடிகர் சிவாஜியுடன் அரசியல் பயணம் தொடங்கிய பெரியார் பேரன் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்Center-Center-Chennai
Published on
Updated on
1 min read

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் பயணம் பல விசித்திரங்கள் நிறைந்தது என்றே சொல்லலாம்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பமே அரசியல் பாரம்பரியம் கொண்டது என்றாலும், இளங்கோவனை அரசியலுக்குள் கொண்டு வந்தது அல்லது இளங்கோவனின் அரசியல் குரு யார் என்று கேட்டால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான்.

சொல்லின் செல்வன் என்று புகழப்பட்ட சம்பத் - ஈவெகி சுலோசனா தம்பதிக்கு 1948ஆம் ஆண்டு மகனாக பிறந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரனும் ஆவார். முதலில் அவரது பார்வை அரசியல் பாக்கம் இல்லை. பி.ஏ. பொருளாதாரம் படித்த அவர் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகராக இருந்தார்.

ஆனால், சம்பத் மறைவுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்து அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார் இளங்கோவன். 1984ஆம் ஆண்டுதான் காங்கிரஸ் - எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி சார்பில் சத்யமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார்.

பிறகு, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சிவாஜி கணேசனுடன் இணைந்து தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கி 1989ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பவானி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். கட்சியின் தோல்வியால் துவண்டுபோன சிவாஜி கட்சியைக் கலைத்த பிறகு, மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினார் இளங்கோவன்.

அங்குதான் அவர் தனது துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க பேச்சுகள் மூலம் முன்னணி தலைவராக உயர்ந்து, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாவட்ட தலைவர் என படிப்படியாக உயர்ந்து 2014ஆம் அண்டு காங்கிரஸ் மாநில தலைவராகவும் இருந்தார்.

தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் மிக பலமான அரசியல் செய்தவர் என்றும் புகழப்படுபவர். ஆனால் சில வேளைகளில் அவரது பேச்சு சர்ச்சையாகி அது அவருக்கே எதிராகவே திரும்பியும் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினாலும் அவர் பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல், தேசிய அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பியிருந்தார். அந்த வகையில், 1996ஆம் ஆண்டு முதல் அவர் 2019ஆம் ஆண்டு வரை ஐந்து முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டாலும் அவர் வென்று எம்.பி. ஆனது என்னவோ 2004ஆம் ஆண்டு தேர்தலில்தான். கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு முதலும் கடைசியுமாக எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அதாவது போட்டியிட்ட 5 தேர்தல்களில் ஒரு முறை மட்டுமே அவர் வெற்றியை பெற்றிருந்தார்.

கடைசியாக மகன் இறப்பால் 2023ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்த போதுதான் உடல்நலக் குறைவால் காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.