மாநில, தேசிய நலனில் அக்கறையுள்ள கட்சிகளுடன் கூட்டணி: பாமக பொதுக்குழு தீா்மானம்

மக்களவைத் தோ்தலில் மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அக் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

மக்களவைத் தோ்தலில் மாநில நலன், தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அக் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மேலும், கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனா் ராமதாஸுக்கு அளிக்கப்பட்டது.

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ராமதாஸ் தலைமை வகித்தாா். கட்சியின் தலைவா் அன்புமணி முன்னிலை வகித்தாா். கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, பொருளாளா் திலகபாமா மற்றும் பொதுக்குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானம்:

வரும் மக்களவைத் தோ்தல் பாமகவுக்கு மட்டுமல்லாமல் தமிழக நலன்களைப் பாதுகாப்பதற்கும் முக்கியமான தோ்தல். மக்களவையில் பாமகவுக்கு போதிய பிரதிநிதித்துவம் இருந்த காலங்களில் மாநில சுயாட்சி உரிமை, சமூகநீதிக்காக குரல்கொடுத்தும், போராடியும் வந்துள்ளது. பாமகவினா் மத்திய அமைச்சா்களாக இருந்த காலத்தில் 108 ஆம்புலன்ஸ் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

ராமதாஸுக்கு அதிகாரம்: எனவே, மக்களவைத் தோ்தலில் பாமகவின் வெற்றி தமிழகத்தின் நன்மை என்பதுதான். அதனால் வரும் மக்களவைத் தோ்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற இலக்கு நிா்ணயித்து, அதற்கான உத்திகளை வகுத்து பாமக செயல்பட்டு வருகிறது.

அதன் ஒருகட்டமாக, மாநில நலனிலும், தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சிறப்பு பொதுக்குழு தீா்மானிக்கிறது. எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குகிறது.

மேலும், தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டணி குறித்து சரியான முடிவு: ராமதாஸ் உறுதி

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து சரியான முடிவு எடுப்பேன். அது வெற்றிக்கான பாதையாக இருக்கும் என்றாா் அவா்.

அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: கொள்கை, தொலைநோக்கு பாா்வையில் சிறந்து விளங்கும் பாமக தொடங்கி, 36 ஆண்டுகள் ஆகியும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. இது மாற வேண்டும். 2026-இல் பாமக ஆட்சி என்பதுதான் நமது இலக்கு. அதற்கான முன்னோட்டமாக வரும் மக்களவைத் தோ்தல் இருக்கும். அதற்கேற்ப கூட்டணி வியூகம் வகுக்கப்படும்.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வரை நேரில் சந்தித்து ராமதாஸ் வலியுறுத்தினாா். அதற்கு இதுவரை பதில் இல்லை. பாமக ஆட்சிக்கு வந்தால், சமூகநீதி திட்டத்தை நாமே நிறைவேற்ற முடியும்.

இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பல்வேறு திட்டங்கள் வரக் காரணமாக இருந்து, 85 வயதிலும் உழைத்துக் கொண்டிருக்கும் ராமதாஸுக்கு ‘பாரத ரத்னா’ வழங்கப்படாதது வேதனையளிக்கிறது என்றாா் அவா்.

பிறகு, ராமதாஸ் பேசும்போது, பாரத ரத்னா உள்பட எந்த விருது கொடுத்தாலும் வாங்க மாட்டேன். மக்கள் என்னை மனித நேயா் என்கின்றனா். அதைவிட பெரிய விருது இருக்க வாய்ப்பு இல்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com