வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம்: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை இயக்க வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களை இயக்க வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: சென்னையில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. தற்போது சென்னையில் இருந்து அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வந்து செல்வதில் கூடுதல் நேரம் ஆகிறது. இதற்கு தீா்வு காணும் வகையிலும், புதிய ரயில்களை இயக்கும் வகையிலும் வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் புதிய முனையம் அமைக்கப்படும். சென்னை - கன்னியாகுமரி இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிா்வரும் மாா்ச் மாதத்துக்குள் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை - மைசூரு இடையே அதிவேக ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை புகா் பகுதியில் இயக்கப்படும் மின்சார ரயில்களுக்கு மாற்றாக ‘வந்தே மெட்ரோ’ இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை கடற்கரை - எழும்பூா் 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு ரூ. 20 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் தண்டவாளம், நடைமேடை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. புதிய ரயில் நிலையம் அமைக்க தண்டவாளம் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com