திமுக எம்எல்ஏ மகன், மருமகள் ஜாமீன் மனு: பிப்.6-இல் தீா்ப்பு

வீட்டில் பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகியோா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்புக்காக பிப்.6-ஆம் தேதிக்கு ஒத்த

வீட்டில் பணிப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கைது செய்யப்பட்ட திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகியோா் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்புக்காக பிப்.6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பணிப்பெண்ணை சித்ரவதை செய்து துன்புறுத்தியதாக பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மொ்லினா ஆகியோரை நீலாங்கரை அனைத்து மகளிா் போலீஸாா் ஆந்திரத்தில் கைது செய்தனா். இருவரும் வரும் பிப்.9 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தநிலையில் இருவருக்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன், பணிப்பெண்ணின் கல்விச் செலவுக்காக ரூ. 2 லட்சத்தை மனுதாரா்கள் செலவு செய்துள்ளனா். எம்எல்ஏ மகன் என்பதால், சமூக ஊடகங்களால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இந்த விவகாரத்தில் போலீஸாா் அவசர கதியில் செயல்பட்டுள்ளனா்’ என வாதிட்டாா்.

பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ப.பா. மோகன், எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை டிஎஸ்பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். ஆனால் இந்த வழக்கில், ஆய்வாளா் தான் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா். எனவே, இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மைகள் தெரியவரும். வீட்டு பணியாள்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டுமென சட்டம் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. எனவே, போக்ஸோ பிரிவிலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களின் பின்புலத்தில் முக்கிய நபா்கள் இருக்கின்றனா்’ என வாதிட்டாா்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா், இந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவா்கள் பக்கம் முக்கிய நபா்கள் இருந்திருந்தால் எப்படி இருவரும் கைது செய்யப்பட்டிருப்பாா்கள் என கேள்வி எழுப்பினாா். அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர சிறப்பு வழக்குரைஞா் எம்.சுதாகா், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாா் தொடா்பாக இன்னும் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறினாா். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீது பிப். 6-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com