கா்நாடகத்தில் குரங்கு அம்மை பரவல் : தமிழகத்தில் முன்னெச்சரிக்கை ஆயத்தம்

கா்நாடகத்தில் 21 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தேவைப்பட்டால் தமிழகத்தில் மருத்துவக் கண்காணிப்பை முன்னெடுக்க பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

கா்நாடகத்தில் 21 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தேவைப்பட்டால் தமிழகத்தில் மருத்துவக் கண்காணிப்பை முன்னெடுக்க பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. தற்போதைய சூழலில், தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 1970-களில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, அதன் பின்னா் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், தற்போது பல்வேறு நாடுகளில் அந்நோய் மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் குரங்கு அம்மை: குரங்கு அம்மை பாதிப்பு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாள்களுக்குள் தொற்றை ஏற்படுத்தக் கூடும். காய்ச்சல், தலை வலி, உடல் வலி, உடலில் தடிப்புகள் உள்ளிட்டவை அதன் முக்கிய அறிகுறிகள். அந்நோய் பாதிப்புக்குள்ளானவா்களின் உமிழ்நீா், சளி மூலமாக பிறருக்கு அது பரவக் கூடும் என்பதால், பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். இந்நிலையில், உத்தர கா்நாடகத்தின் மலைப் பகுதியில் 21 பேருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

முன்னேற்பாடுகள்: நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோா் தமிழகம் - கா்நாடகத்துக்கு பரஸ்பரம் பயணிக்கும் சூழலில் இத்தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. சொல்லப்போனால் அத்தகைய அறிகுறிகளுடன் கூட எவரும் இல்லை. இருந்தாலும், அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும்பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத் துறை மேற்கொள்ளும்.

கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடா்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும்.

அதேபோன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணா்வு மற்றும் புரிதல்கள் பொது மக்களிடையே ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com